Friday, 24 January 2014

திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், "கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்றது.



இந்த நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக்குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும், திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச்சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை,கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு
முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று காலை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, காரசார விவாதம் நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன் தொடர்ச்சியாகவே, மு.க.அழகிரியைத் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக அறிவிப்பு வெளியிட்டது.
சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அழகிரி, திமுக கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்து அதிருப்தியைப் பதிவு செய்தார்.
இதனிடையே, மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து திமுக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

கி.வீரமணி வரவேற்பு
திமுகவில் இருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந்நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது.
குடும்ப அரசியல் நடத்துகிறது தி.மு.க. என்ற பழி இதன்மூலம் துடைக்கப்பட்டுள்ளது. திமுக இதன் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது" என்று வீரமணி கூறியுள்ளார்.
Posted by sundar on 01:56 in    No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search